×

நேர்மறை எண்ணங்களுடன் உயர்ந்துவிடு

உலகில் வாழ்ந்த தலைவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை தீர்மானித்து,அதை அடைவதற்கான வழிகளையும் மேற்கொண்டு,அதை அடைந்தும் இருக்கிறார்கள்.ஆபிரகாம் லிங்கனின் இலக்கு கருப்பின மக்களுக்கு விடுதலை. ஐன்ஸ்டீனின் இலக்கு அறிவியல் மேதையாவது. மகாத்மா காந்தியின் இலக்கு இந்திய மக்களின் விடுதலை.ஆகவே இவர்களைப் போல உங்களுடைய இலக்கிற்கு நீங்கள் ஒரு வடிவம் கொடுக்க வேண்டும். ஆனால் வெற்றி பெற மற்றொரு முக்கியமான பண்பும் தேவைப்படுகிறது. அதுதான் நேர்மறை எண்ணம். ஒரு டம்ளரில் பாதி தண்ணீர் இருந்தால் ஒரு சிலர் அதை பாதி தண்ணீர் உள்ளது என்று சொன்னால் அது நேர்மறை. ஆனால் பாதி டம்ளர் காலி என்று சொல்வது எதிர்மறை. நீங்கள் எவ்வாறு சொல்வீர்கள், சிந்தித்துக் கொள்ளுங்கள்.

வாழ்க்கையில் முன்னேறுவதற்குத் தடையாக உள்ள முக்கிய குறைபாடே தாழ்வு மனப்பான்மையும், எதிர்மறை எண்ணங்களும் தான், இவற்றை உங்கள் மனதில் இருந்து அகற்றினால் மட்டுமே, உங்களால் ஒரு தெளிவான இலக்கை தீர்மானிக்க முடியும். ஐ.ஏ.எஸ் போன்ற உயர் அரசுப்பணி தேர்வில் தேர்ச்சி பெறுவற்கு பல மாணவர்கள் ஆண்டுதோறும் முயற்சி செய்கிறார்கள், ஆனால் அவர்களில் சிலர் மட்டுமே தேர்ச்சி பெறுகிறார்கள். யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரும் வெவ்வேறு மாதிரியான யுக்திகளை கையாள்கிறார்கள். கடுமையான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.

இப்படி கடுமையாக முயன்று ஐஏஎஸ் அதிகாரியானவர்தான் சுரபி கௌதம். தனது திறமைக்கு ஏற்ப தன்னை வழிநடத்தி முதல் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ் அதிகாரியுள்ளார். தற்போது சிவில் சர்வீஸ் தேர்விற்கு முயன்று வரும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு உத்வேகம் அளித்து வருகிறார். யார் அந்த சுரபி கெளதம்? மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த சுரபி கௌதம் சிறுவயதிலிருந்தே புத்திசாலித்தனமான மாணவராக வலம் வந்தவர். இவரது தந்தை சிவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், தாயார் ஆசிரியையாகவும் பணியாற்றியுள்ளனர். சுரபி தனது பள்ளிப் பருவத்தில் இருந்தே வகுப்பில் முதலிடம் பிடித்து வந்துள்ளார். குறிப்பாக 10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் டியூசன், ஸ்பெஷல் கோச்சிங் போன்ற எந்தவித உதவியும் இன்றி வீட்டில் இருந்தே படித்து 90 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளார்.

பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, சுரபி மாநில பொறியியல் நுழைவுத் தேர்வில் கலந்துகொண்டு தேர்வில் வெற்றி பெற்றார்.இதனையடுத்து, மேற்படிப்புக்காக நகரத்திற்கு இடம் பெயர்ந்தார். தனது கிராமத்தில் இருந்து நகரத்திற்கு படிக்கச் சென்ற முதல் பெண் சுரபி கெளதம் தான். போபாலில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் துறையில் பொறியியல் முடித்தார், அங்கு அவர் பல்கலைக்கழகத்தில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கமும் வென்றுள்ளார்.
பள்ளி முதல் கல்லூரி வரை அனைத்திலும் முதலிடம், எழுதிய போட்டித் தேர்வுகளில் எல்லாம் வெற்றி என பலவகையில் திறமைசாலியாக இருந்தாலும், ஆங்கிலத்தில் சரியாக பேச முடியாததால் சுரபி கெளதம் நிறைய கேலி, கிண்டல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஆங்கிலம் சரியாகப் பேசாததால் கல்லூரியில் பலமுறை கேலி செய்யப்பட்டார். ஆனாலும் அவர் நம்பிக்கையை இழக்கவில்லை. தன்னுடைய வெற்றியின் மூலம் கேலி, கிண்டல் செய்தவர்களை திரும்பிபார்க்க வைத்துள்ளார்.

தன் கருத்தை மற்றவருக்குப் புரிய வைக்கும் அளவுக்கு ஆங்கிலமொழியைக் கற்றுக் கொண்டால் தான் சிறந்த நிலையைப் பெற முடியும் என்பதை சுரபி அறிந்து கொண்டார். அதனால், தினமும் 10 புதிய வார்த்தைகளை ஆங்கிலத்தில் கற்க ஆரம்பித்தார். ஆங்கில செய்திதாள்களை வாங்கி படித்து ஆங்கில மொழி புலமையை வளர்க்க விடா முயற்சியுடன் கடுமையான பயிற்சியை மேற்கொண்டார். அதன் பலனால் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் நிலைக்கு தன்னை மாற்றிக்கொண்டார்.

தன்னுடைய வாழ்வில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்ற உயர்ந்த இலக்கை தீர்மானித்தார். ஐ.ஏ.எஸ் கனவு நினைவாகும் முன் சுரபி கௌதம் பல தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளார். BARCல் அணு விஞ்ஞானியாக ஓராண்டு பணியாற்றியவர். கேட், இஸ்ரோ, எஸ்எஸ்சி, சிஜிஎல், டெல்லி போலீஸ் போன்ற பல்வேறு போட்டி தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். இருந்தபோதும் தன்னுடைய இலக்கை அடைய 2013ல் நடந்த ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதிப்பதே அவரின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. ஆங்கிலம் பேச தெரியாததால் கேலி, கிண்டலுக்கு ஆளானவர். மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு,பள்ளி முதல் கல்லூரி வரை அனைத்திலும் முதலிடம் பெற்று எழுதிய போட்டித் தேர்வுகளில் எல்லாம் வெற்றி பெற்று, கடைசியில் யூ.பி.எஸ்.சி தேர்விலும் வென்று ஐஏஎஸ் அதிகாரியாக உயர்ந்து சாதனை மங்கையாக திகழ்கிறார் சுரபி கௌதம்.பின்தங்கிய கிராமத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, பள்ளி கல்லூரிகளில் படிக்கும் போது ஆங்கிலம் பேச தெரியாத காரணத்தினால் கேலி, கிண்டல்களுக்கு ஆளான பின்பும் ஆங்கில அறிவை மேம்படுத்திக்கொண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதித்த சுரபி கௌதமின்வாழ்க்கை முன்னேற துடிக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் ஒரு முன் உதாரணம்.தன்னம்பிக்கை இருந்தால் சுரபிகௌதம் போல வாழ்வில் எந்தத் தடையும் எளிதாக கடந்து இலக்கை அடைந்து வெல்ல முடியும் என்பதில் ஐயமில்லை.

  • பேராசிரியர்,
    அ.முகமது
    அப்துல்காதர்.

The post நேர்மறை எண்ணங்களுடன் உயர்ந்துவிடு appeared first on Dinakaran.

Tags : Abraham Lincoln ,
× RELATED கருப்பின அடிமைத்தன விடுதலை...